தேர்தல் தீர்ப்பை மதித்து காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய மத்திய அரசு தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு முழு அதிகாரம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, இலங்கையின் அரசு நடந்து கொள்ளும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, பொலிஸ் மற்றும் காணி சம்பந்தப்பட்ட துறைகளில் அதிகாரம் செலுத்த இயலாது என்றும், அவை மத்திய அரசின் நேரடிப்பொறுப்பில் கொண்டுவரப்படும் என அறிவித்திருப்பது, தேர்தல் முடிவுகளை முற்றாக நிராகரிக்கும் செயலாகும்.
13 ஆம் திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு உள்ள நிலம் பொலிஸ் தொடர்பான அதிகாரங்களை மறுக்கவோ, குறைக்கவோ கூடாது என இந்திய அரசு வற்புறுத்தியதால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தச் சடட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த அடிப்படையில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதால், அதனை இலங்கை அரசு நிறைவேற்றுவதை இந்திய அரசு கண்டிப்பான நிபந்தனை ஆக்கக்கோருகிறோம்.
வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலின் போது, போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டணி, அதிகாரங்களைப்பெற்று மக்களின் உரிமைகளை மீட்டுத்தருவோம் என்றே பிரசாரம் செய்தது. அதனை ஏற்று மக்கள் பேராதரவு அளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.
வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணி 75 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை வற்புறுத்துவதே மாநில அதிகாரங்கள் தான். இதனை இலங்கை அரசு நிராகரித்து, தமிழின அழிப்பை தொடர்ந்து சட்ட ரீதியில் செய்ய முற்படுவது கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில் இந்திய மத்திய அரசு தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழின அழிப்பை தடுத்து, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு முழு அதிகாரம் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments