நடு வானில் விமானி மரணம் : விமானத்தை தரையிறக்கிய பயணி
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் விமானி, மாரடைப்பால் சரிந்ததால், அனுபவமில்லாத பயணி ஒருவர், விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.
பிரிட்டனின், ஹம்பர்சைட் விமான நிலையத்தில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன், சிறிய ரக விமானம், ஒரு பயணியுடன், கெக்னெஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டது.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானிக்கு, மார்பில் வலி ஏற்பட்டது. உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், விமானத்தை ஓட்ட முடியவில்லை என்றும் கூறிவிட்டு, மயங்கி விட்டார்.
உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், தரையில் இருந்து, விமானத்தில் இருந்த பயணியிடம், விமானத்தை இயக்குவது குறித்து வழிகாட்டினர்.
அதன்படி, விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பயணி, அவசரமாக, ஹம்பர்சைட் விமானத்தில், தரையிறக்கினார்.
குறைவான வெளிச்சத்தின் காரணமாக, விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளின், வழிகாட்டுதலின்படி, அந்தப் பயணி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானம் தரையிறங்கியதும், மயங்கிக் கிடந்த விமானியை பரிசோதித்தபோது, அவர் இறந்திருப்பது தெரியவந்தது.
0 Comments