Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனைவராலும் நேசிக்கப்பட் ஊடகவியலாளர் ரவிவர்மன்

              அனைவராலும் நேசிக்கப்பட் ஊடகவியலாளர் ரவிவர்மன்
ஊடகத்துறைக்கு கடந்த சனிக்கிழமை கரிநாளாகவே அமைந்துவிட்டது. வீரகேசரியின் 
முன்னாள் பிரதம ஆசிரியரான, "நடா' என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் 
நடராஜாவையும் தினக்குரலின் முன்னாள்  உதவி ஆசிரியரான ரவிவர்மன் என பாசத்தோடும் 
உரிமையோடும் அழைக்கப்படும் 
மகேந்திரராஜாவையும் கடந்த சனிக்கிழமை ஒரே சமயத்தில் நாம் பறிகொடுத்துவிட்டோம்.


தினக்குரல் ஆசிரிய பீடத்தில் ரவிவர்மனுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றியவன் 
என்ற வகையில் அவரைப்பற்றி சிலவிடயங்ளையாவது இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு, ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக்கொண்ட பரமக்குட்டி மகேந்திரராஜா என்ற
 ரவிவர்மனின் மக்களுக்கான போராட்டம் முதலில் விடுதலைப்போராட்டமாகவே தொடங்கியது,

1980 இல் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் (புளொட்) தன்னை இணைத்துக் கொண்ட 
ரவிவர்மன் "மது' என்ற பெயரில் செயற்பட்டுவந்தார்.  அதன்பின்னர் காலச் சூழ்நிலைகளின் 
மாற்றத்தினால் விடுதலைப் போராட்டப் பாதையிலிருந்து விலகிய ரவிவர்மன் வெளிநாடு
 செல்வதற்காக 90 களில் கொழும்பை நோக்கி வந்தபோதும், அது கைகூடாமல் போனாலும் 
அவருக்கு வாழ்க்கைத்துணை கிடைத்தது.

வாழ்க்கைப் பயணத்தில் இணைந்து விட்டதால் வெளிநாட்டுப் பயணத்தைக் கைவிட்ட
 ரவிவர்மன் மீண்டும் தமிழ் மக்களின் உரிமைக்காக பேனா என்ற ஆயுதத்தைக்
 கையிலெடுத்துக்கொண்டார். முதலில் "சரிநிகரில்' தமிழின அடக்குமுறையாளர்களுடன் 
பேனாவால் சமர்புரிந்த ரவிவர்மன் அக்காலப்பகுதியில் தமிழ் தேசிய உணர்வுடன் 
ஆரம்பிக்கப்பட்ட "தினக்குரல்' பத்திரிகையில் 1997 இல் தன்னை இணைத்துக்கொண்டார்.  
தினக்குரலின் ஆசிரிய பீடத்தில் தமிழ் அரசியல்கட்சிகளின் செய்திச் சேகரிப்புப் பணி 
ரவிவர்மனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்தளவுக்கு ரவிவர்மனுக்கு தமிழ் அரசியல் கட்சிகளுடன் மிகநெருக்கமான தொடர்புகள் 
இருந்ததுடன்  தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களில் அநேகர் ரவிவர்மனின் நெருங்கிய
 நண்பர்களாக இருந்ததால் பரபரப்பான செய்திகளுக்கு ரவிவர்மனுக்கு பஞ்சமிருக்கவில்லை.

தினக்குரல் தினசரி ஆசிரியர் பீடத்தில் ரவிவர்மன் உதவி ஆசிரியராக இருந்தபோதும் 
தினக்குரல் வார வெளியீடுகளின் பிரதம ஆசிரியராக விருந்த பாரதி, ரவிவர்மாவை  நன்கு 
பயன்படுத்திப் புடம் போட்டார்.தினக்குரல் வாரவெளியீட்டில் ரவிவர்மன் "அஜாதசத்ரு,' "துருவி' 
என்ற பெயர்களில் எழுதிய பத்திகள் அப்போது அரசியல் அரங்கில் பிரபலமானவையாகவும் 
சர்ச்சைக்குரியவையாகவுமே இருந்தன. இலங்கையின் தமிழர் அரசியல் நிலையை அஜாதசத்ரு
 தோலுரித்துக்காட்ட, அரசியல் அந்தரங்க  விடயங்களை "துருவி' வெளிப்படுத்திவந்தது.

துருவியின் வேலையால் நிர்வாகத்துடன் ரவிவர்மன் முரண்பட்ட சம்பவங்களும் உண்டு,
இறுதியில் அழுத்தங்கள் காரணமாக "துருவி'  இடைநிறுத்தப்பட்டது.இவ்வாறான ரவிவர்மனின்
 கட்டுரைகளுக்காக இலங்கை பத்தரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகைப் பேரவையும்
 2005 ஆம் ஆண்டு அவருக்கு விருது வழங்கிக் கௌரவித்தன.  தினக்குரலில் இருந்து கொண்டே
 ரவிவர்மன் “நெடுங்காலத்தின் பின்னொரு நாள்' என்ற சிறுகதைத்தொகுப்பையும் சில 
கவிதைத்தொகுதிகளையும் வெளியிட்டார்.

நூல் வெளியிடுமளவுக்கு ரவிவர்மனிடம் நிதிவளம் இல்லாதபோதும் புலம்பெயர் 
நாடுகளிலுள்ள 
மற்றும் இங்குள்ள நண்பர்களின் உதவியுடன் இவற்றை வெளியிட்டார். ரவிவர்மனைவப் 
பொறுத்தவரையில் 
சகலருடனும் நெருக்கமாகப் பழகும் பண்பு கொண்டவர். அலுவலகத்தில் அனைத்து பிரிவு
 ஊழியர்களுக்கும் ரவிவர்மா அண்ணன் என்றால் அன்பு அதிகம்.

யாரும் அவரிடம் உதவிகள் கேட்டால் அதனைச் செய்து கொடுப்பதற்காக வேலைக்கும் 
வராது சென்று விட்டு பின்னர் பொறுப்பாசிரியர்களிடம் வாங்கிக்கட்டிய சம்பங்களும் 
நிறைய உண்டு. ஆனால், அதற்காக ரவிவர்மா கோபப்பட்டதை நான் ஒருபோதும் காணவில்லை.
மேலதிகாரிகளின் கண்டனங்களைக்கூட அமைதியாகச் சிரித்தவாறு கேட்டுக் கொண்டிருப்பார்.

அடிக்கடி வீட்டிலிருந்து அவர் கொண்டு வரும் அவித்த  மரவள்ளிக்கிழங்கை ஆசிரிய பீடத்தால் 
மறக்கமுடியாது.அப்போது எமது ஆசிரியபீடத்தில் 30 க்கு மேற்பட்டவர்கள் இருந்தபோதும் 
அத்தனை பேருக்கும் சிறு சிறு துண்டுகளாக தானே பிரித்து வழங்குவார். மத்தியானத்தில் 
அவர் வீட்டிலிருந்து கொண்டுவரும் சாப்பாட்டிற்காக நான் உட்பட இன்னும் சிலர் எங்கள் 
சாப்பாட்டையும் சாப்பிடாது காத்திருப்போம். 
ஏனெனில் ரவிவர்மன் வீட்டுக்கறிகள் அத்தனை சுவை.

அவரும் எமக்காகவே தனது பார்சலில் அதிக  கறிகளைப் போட்டுக் கொண்டுவருவார்.  
தினக்குரலின் பிரதம ஆசிரியராக விருந்த சிவனேச் செல்வன் அவருக்குப்பின் பிரதம 
ஆசிரியராகவிருக்கும் தனபாலசிங்கம் தற்போது ஆசிரியராகவுள்ள ஹரன் ஆகியோரின் 
நன்மதிப்பைப் பெற்ற ரவிவர்மன் அவர்களிடம் அதிகமாக வாங்கிக்கட்டிய சம்பவங்களும்
 நிறையவே உண்டு.

சிலவேளைகளில் நாம் கூட ரவிவர்மனுடன் முரண்பட்டாலும் அடுத்த நிமிடமே அவருடன் 
நெருக்கமாகிவிடுவோம். அந்தளவுக்கு எம்மிடம் இடம்பிடித்தவர் ரவிவர்மன்.  ரவிவர்மனிடம் 
ஊடகப் பணி பயின்ற  பலரும் இன்று பல ஊடகங்களில் இருக்கின்றனர்.

எமது ஆசிரியர் பீடத்திற்கு கற்கை நெறிக்காக வரும் மாணவர்களுக்கு மட்டுமன்றி 
வெளியிடங்களுக்கும் சென்று ஊடகம் தொடர்பான வகுப்புக்களை ரவிவர்மன் நடத்தியுள்ளார். 
தினக்குரலில்14வருடங்கள் வரை பணிபுரிந்த ரவிவர்மன் பின்னர் அதிலிருந்து விலகி 
கொழும்பிலுள்ள சில கட்சித்      தலைவர்களின் ஊடக இணைப்பாளராக உதவிகளை 
வழங்கிவந்தார்.

தினக்குரலிலிருந்து ரவிவர்மன் விலகியிருந்தாலும் தினசரி காலையில் எமது  அலுவலகம் 
வந்து எம்முடன் சிறிது நேரம் அளவளாவிவிட்டுச் செல்வது வழமை. கடந்த சிலநாட்களாக 
ரவிவர்மன் வராததையடுத்தே அது தொடர்பில்நாம் விசாரித்தபோது அவர் கொழும்பு 
தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கடந்த வெள்ளிக்கிழமை காலை    
கிடைத்தது.சனிக்கிழமை இரவு ரவிவர்மன் காலமாகி விட்டார் 
என்ற செய்தி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எமக்குக் கிடைத்தது.  ரவிவர்மன் 
எம்முடன் பணிபுரிந்த காலத்தில் சக ஊழியர்கள் அல்லது நண்பர்கள் வீடுகளில் ஏதாவது 
விசேட வைபவங்கள் நடந்தால் அதில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டமாட்டார்.


ஆனால், அதுவே துக்க நிகழ்வாக இருந்து விட்டால் அங்கு போகவேண்டும் என்பதில்
 ரவிவர்மனே முதல் ஆளாக நிற்பார். அநேக துக்க நிகழ்வுகளுக்கு ரவிவர்மனுடனேயே 
சென்றுவந்த நாம் இறுதியில் ரவிவர்மனின் மரண வீட்டுக்கும் செல்வேண்டிய நிலையை 
காலன் ஏற்படுத்திவிட்டான் .

Post a Comment

0 Comments