இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், அது தொடர்பான அறிவிப்பை உறுதியோடு அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இலங்கைக்கு அழுத்தம் தரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தின் மூலமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ரயில் மற்றும் வீதி மறியல், முற்றுகை, அரச அலுவலங்களுக்கு பூட்டு, உண்ணாவிரதம் என மாணவர்களும், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ச்சியான பொராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில், பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர், தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாது,
ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களை இலங்கை செய்துள்ளது. அதன்படி, பொதுநலவாய அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக்குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும்.
தமிழகம் சார்பில் அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் அம் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே, மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து விட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவும் புறக்கணிப்பதாக உறுதியோடு அறிவிக்க வேண்டும். இதன்மூலம், இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments