Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழினத்தின் உணர்வுகளுடன் விளையாடுவதே சிங்களத்தின் பொழுதுபோக்காகிவிட்டது - கோவிந்தன் கருணாகரம்

தமிழினத்தின் உணர்வுகளுடன் விளையாடுவதே சிங்களத்தின் பொழுதுபோக்காகி விட்டது. துட்டகைமுணு மன்னனுக்கிருந்த மனிதாபிமானம்கூட மகிந்த அரசிடம் காணமுடியாததுதான் இங்கு முரண்நகை என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சையான நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழினத்தின் உணர்வுகளுடன் விளையாடுவதே சிங்களத்தின் பொழுதுபோக்காகி விட்டது. கடந்த ஓரிரு தினங்களில் நடந்த நிகழ்வுப் போக்குகளை நோக்கும் போது இவ்வாறு தான் எண்ணத் தோன்றுகிறது.
தமிழினத்தின் தமிழ்த் தேசியத்தின், அடையாளங்களை வடகிழக்கில் சிங்களமயப்படுத்தி அரசு இன்று இறுதியாக மாவீரர் துயிலும் இல்லகள் மீது தன் அகோர முகத்தை கிளப்பியுள்ளது. மாவீரர் துயிலுமில்லங்களை சுற்றிவளைத்து அதற்குள் யாரும் உட்புகமுடியாத சூழ்நிலையைத் தோற்றுவிப்பதன் மூலம் தமிழர் தம் உணர்வுளுடன் விளையாடப் பார்க்கின்றது பேரினவாதம். இரு நாடுகளுக்கிடையேயான யுத்தம் ஒன்று ஏற்படும் போதோ, உள்நாட்டு யுத்தம் ஒன்றின் போதோ யுத்தத்தில் ஈடுபடும் இருதரப்பும் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் குறித்து நிற்கின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள இனவாதிகளால் விடுதலை வீரன் எனப் போற்றப்படும் துட்டகைமுனுவே தன்னுடன் போரிட்டு உயிர் நீத்த எல்லாள மன்னனுக்கு தக்க நினைவிடம் அமைத்து அவ்வழியால் பயணிப்போர் அனைவரும் அம்மன்னனுக்கு உரிய கௌரவத்தை வழங்கவேண்டும் என்று ஆணையிட்டதாக சிங்கள வரலாறு கூறும் மகாவம்சமும் எடுத்துரைக்கின்றது. அந்தவகையில் துட்டகைமுனு மன்னனுக்கிருந்த மனிதாபிமானம்கூட மகிந்த அரசிடம் காணமுடியாததுதான் இங்கு முரண்நகை.
கிழக்கின் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் தரவை, தாண்டியடி, வாகரை உள்ளிட்ட இடங்களில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அடையாளம் தெரியாத வண்ணம் உருமாற்றம் செய்யப்பட்டு விட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள் போருக்குப் பின்னர் மயானங்களுக்கு ஒப்பானவையாகும். அந்த மயானத்துக்குள் சென்று தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூட வசதிகள் இல்லாமல் செய்யப்பட்டு விட்டன. வடக்கு கிழக்கில் எஞ்சியிருக்கும் துயிலுமில்லங்களையாவது பாதுகாத்து, உயிர்நீத்தவர்களின், சொந்தங்களை இழந்த உறவுகள் வருடாவருடமேனும் அஞ்சலி செலுத்துவதற்கு ஜனநாயக அரசு என்ற ரீதியில் இடமளிக்குமா என்பது கேள்விக்குறியே.
இந்த அடிப்படையில், விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்து உயிர்நீத்த இளவல்களது உடலம் புதைக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதும், அதன் அடையாளங்களை இல்லாதொழிப்பதும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை தொலைத்துவிடும். அண்மைக்காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தி வரும் இணக்கப் போக்குக்கு சிங்களம் தரும் பரிசு இதுவென்றால் இவர்களிடம் நல்லிணக்கத்iதையோ, இனங்களுக்கிடையே சமத்துவத்தையோ எதிர்பார்ப்பது முயல்கொம்பு தேடுவதற்கு ஒப்பானதேயாகும்.
மாவீரர் துயிலும் இவல்லங்களை இல்லாது ஒழிப்பது மூலம் கல்லறைகளை அழித்துவிடலாம். ஆனால், கல்லறைக்குள் துயிலும் மாவீரர்களது மனங்களில் நிறைந்திருந்த விடுதலை உணர்வினை மக்கள் மனங்களிலிருந்து அகற்ற முடியாது. இந் நிகழ்வுகூட இலங்கை துருவமயப்படுத்தப்படுவதையே உள்நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துரைத்து நிற்கிறது.

Post a Comment

0 Comments