ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
ராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 12 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று வென்றது. ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக முரளி விஜய், மைக்கேல் ஹஸி களமிறங்கினர். டேல் ஸ்டெயின் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே முரளி விஜய் டக் அவுட் ஆகி வெளியேற, சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து ஹஸியுடன் அதிரடி ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தனர். ஹஸி 23 ரன் எடுத்து டுமினி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்திவ் பட்டேலிடம் பிடிபட்டார். பத்ரிநாத் 13 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய ரெய்னா 38 பந்தில் அரைசதம் அடித்தார். ரெய்னா , கேப்டன் டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு ஸ்கோரை உயர்த்த போராடியது. பெரேரா வீசிய 18வது ஓவரில் டோனி 5 சிக்சர் விளாசினார். ரெய்னா 84 ரன் (57 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. டோனி 63 ரன் (19 பந்து, 1 பவுண்டரி, 8 சிக்சர்), பிராவோ 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து தோற்றது. சம்மி அதிகபட்சமாக 50 ரன் விளாசினார். தவான் 48, பார்திவ் 37 ரன் எடுத்தனர்.
0 Comments