இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை: மனித உரிமை பேரவையில் பிளவு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி
மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுபட்டிருந்தது .
அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதுடன் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன .
இந்த நிலையில் பாகிஸ்தான் , ரஷ்யா , சீனா , வெனிசுவேலா ஆகிய நாடுகள் இலங்கையை கடுமையாக ஆதரித்து கருத்துக்களை முன்வைத்தன .
அதேவேளை இலங்கை அரசாங்கம் , மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி ஊக்குவிப்பதாக இந்தியா தெரிவித்தது .
புனரமைப்பு , கண்ணிவெடி அகற்றல் , மீள்குடியேற்றம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் போதுமான அங்கீகாரத்தை வழங்கவில்லை என இந்திய பிரதிநிதி குறிப்பிட்டார் .
இலங்கையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்திய இலங்கை அரசு சர்வதேசத்திற்கு தனது அர்ப்பணிப்பை வெளிகாட்டியுள்ளது எனவும் அவர் கூறினார் .
வடக்கு மாகாண மக்களின் அவசர தேவைகளை உணர்ந்து இலங்கை அரசும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஆக்கபூர்வமாக கூட்டாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் .
அதேவேவேளை இங்கு கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ,
இலங்கையின் மூத்த பிரமுகர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் குறைமதிப்புக்கு உட்படுத்த முயற்சித்து வருவதாக கவலை வெளியிட்டார் .
ஆணையாளரின் கடந்த மாத இலங்கையில் மேற்கொண்ட விஜயம் தொடர்பிலான அறிக்கை குறித்து கலக்கமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனையோர் இழிவுபடுத்தும் அல்லது திசைதிருப்பும் முயற்சியாக தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார் .
அதேவேளை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தொழிற்நுட்ப உதவிகளை இலங்கை பெற்று கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அமெரிக்க பிரதிநிதி , கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .
இதனிடையே வடக்கு மாகாண சபை தேர்தல் வெற்றிகரமான நடத்தப்பட்டமையை வரவேற்ற அவுஸ்திரேலிய பிரதிநிதி , இலங்கையை தனிமைப்படுத்தாது மனித உரிமை கவலைகளை சீர்செய்ய அந்த நாட்டை ஊக்கப்படுத்த வேண்டியதே சிறந்த வழியாகும் என தெரிவித்தார் .
0 Comments