நவி பிள்ளையின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு
இலங்கை தொடர்பான பரிந்துரைகள் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் அறிக்கை,ஜெனீவாவில் நடைபெற்றுவருகின்ற மனித உரிமைகள் பேரவையின் பருவக்கால கூட்டத்தொடரில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அண்மையில் நவனீதம் பிள்ளை இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்த அறிக்கை மீது இன்றைய தினம் வாக்கெடுப்பு நடைபெற மாட்டாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹோ தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் ஒரு வார கால இலங்கை விஜயத்தின் போது,அவர் நேரில் கண்டவை மற்றும் அரசாங்கம்,சிவில் அமைப்புக்கள்,மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர் பெற்றுக்கொண்ட தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி நவனீதம் பிள்ளை வருடாந்த கருத்தொன்றை முன்வைக்கவுள்ளார்.
இது அவரின் வருடாந்த கூற்றே தவிர,அவரின் அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதமே முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் முகம்கொடுப்பதற்காக, தமது திணைக்களத்தின் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதாக சட்ட மாஅதிபர் பாலித்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
0 Comments