திஸர பெரேராவின் அதிரடியான் சண் றைசர்ஸ் வெற்றி
இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரின் 7ஆவது போட்டியில் சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றுள்ளது. ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோ அணிக்கெதிரான இப்போட்டியில் சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணி திஸர பெரேராவின் சிறப்பான சகலதுறைப் பெறுபேறுகளின் உதவியுடன் வெற்றிபெற்றது.
மொஹாலியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.
இனிங்ஸின் முதலாவது பந்திலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்த ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோ அணி, அதன் பின்னர் சிறப்பான இணைப்பாட்டங்களைப் புரிந்து 160 ஓட்டங்கள் என்ற சிறப்பான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோ அணி சார்பாக டெரன் பிராவோ 44 பந்துகளில் 66 ஓட்டங்களையும், எவின் லூயிஸ் 14 பந்துகளில் 22 ஓட்டங்களையும், டினேஷ் ராம்டின் 15 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக டெரன் சமி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்ரெய்ன் 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
161 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சண் றைசர்ஸ் ஹைதராபாத் ணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, 10.1 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களுடன் காணப்பட்டது. இதன்படி, இறுதி 59 பந்துகளில் 91 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தன. அதன் பின்னர் அதிரடி ஆட்டம் நிகழ்த்திய திஸர பெரேரா அவ்வணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக திஸர பெரேரா 32 பந்துகளில் 57 ஓட்டங்களையும், ஷீகர் தவான் 18 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோ அணி சார்பாக சுனில் நரைன் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், நிக் ஸ்ருவேர்ட் 3.3 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக திஸர பெரேரா தெரிவானார்.
0 Comments