13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
இலங்கையில் வடக்கு உட்பட்ட மூன்று மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டமையை இந்தியா வரவேற்றுள்ளது.
தேர்தல் நிறைவுற்றுள்ள நிலையில் 13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கோரியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கையின்படி அதிகப்படியான வாக்களிப்பு மற்றும் கட்சிகளின் பங்கேற்பு என்பவற்றின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டமையானது, மக்களின் ஜனநாயகத்துக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுநலவாய மற்றும் சார்க் வலய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கையின் படி நடத்தப்பட்ட தேர்தல் குறித்த தகவல்களை அறிந்துக்கொள்ளமுடிகிறது.
எனவே இலங்கை அரசாங்கம் தேர்தல் முடிவுகளை கருத்திற்கொண்டு 13வது அரசியல் அமைப்பு உட்பட்ட வடக்கு மக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கைகள் நம்பிக்கையை அளிக்கின்றன.
எனவே ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமமான உரிமைகளுடன் வாழவேண்டும் என்ற அம்சத்தின் அடிப்படையில் அனைவரும் செயற்படவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த மாதம் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் குர்ஷித், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
0 Comments