Home » » ஆர்ப்பாட்டங்களினூடாக வட்டி வீதங்களை குறைக்க முடியாது : பந்துல குணவர்தன!

ஆர்ப்பாட்டங்களினூடாக வட்டி வீதங்களை குறைக்க முடியாது : பந்துல குணவர்தன!


 வங்கி வட்டி வீதங்கள் குறித்த தீர்மானங்கள் மத்திய வங்கியுடன் தொடர்புடையவையாகும். இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் கிடையாது.

அதற்கான அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை. அதிகாரமற்ற விடயத்தில் தலையிடுமாறு அழுத்தம் பிரயோகிப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி, இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை முறியடிப்பதற்காகவே ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில அரசியல் குழுக்கள் சூழ்ச்சி செய்வதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வங்கி வட்டி வீதங்கள் தொடர்பான தீர்மானங்களில் அரசியல்வாதிகளால் தலையிட முடியாது. அதற்காக அதிகாரம் மத்திய வங்கியிடம் மாத்திரமே காணப்படுகிறது.

அரசாங்கத்திற்கும் இவ்விடயத்தில் எவ்வித அதிகாரமும் கிடையாது. எனவே அதிகாரம் அற்ற ஒரு வியடத்தை செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பது பிரயோசனமற்றது.

பொருளாதார நிலைமைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்தால் , வங்கி வட்டி வீதங்களும் தானாகவே வீழ்ச்சியடையும். தற்போது பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 

அதற்கமைய வங்கி வட்டி வீதங்களும் கட்டுப்படுத்தப்படும். கடன் மறுசீரமைப்பு , நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த சாதகமான சமிஞ்ஞையின் பிரதிபலனே இவையாகும்.

அத்தோடு சுமார் 5000 மில்லியன் டொலர் வங்கி முறைமையூடாக நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. 

பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. எனவே டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடக் குறைவடைந்தால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் பாரியளவில் குறைவடையும்.

எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வு கிடைக்கப் பெற்றால், அதன் பயன் நிச்சயம் அனைத்து மக்களையும் சென்றடையும். 

எனினும் இதனை முறியடிப்பதற்காக ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனர். இந்த அரசியல் சூழ்ச்சிகள் நிறைவேறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |