Home » » துருக்கி நிலநடுக்கம் - இலங்கை பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

துருக்கி நிலநடுக்கம் - இலங்கை பெண் ஒருவரின் சடலம் மீட்பு!


 துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

கலகெதர பகுதியை சேர்ந்த உயிரிழந்த பெண் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,000-ஐ கடந்தது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின.

துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி, சிரியாவின் வடக்குப் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்து விட்டது. துருக்கியில் மட்டும் உயிரிழப்பு 24,500 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,575 ஆக அதிகரித்துள்ளது. சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து துருக்கி சென்றுள்ள மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும் மீட்புப் பணிகளில் துருக்கி, சிரியாவுக்கு உதவி வருகிறது. உலக வங்கி சார்பில் 1.18 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |