Home » » இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு 7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பேருந்துகள், பாடசாலை மாணவர்களின் வசதிக்காக சேவையில்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு 7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பேருந்துகள், பாடசாலை மாணவர்களின் வசதிக்காக சேவையில்

 


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு 7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பேருந்துகள், பாடசாலை மாணவர்களின் வசதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அரச நிறுவனமான லங்கா அசோக் லேலண்ட், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 80 பேருந்துகளை 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்திருந்தது.

இந்த பேருந்துகள், கொள்வனவுக்கான தொழில்நுட்பக் குழுவின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் குறித்த நிறுவனத்தின் பனாகொட தொழிற்சாலை வளாகத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டுள்ளன.

பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் செலவிட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளை பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு பயன்படுத்துவதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தையும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்துகளின் தற்போதைய சந்தை மதிப்பில் பாதிக்கு இந்தப் பேருந்துகளை வழங்கவும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்தந்த பேருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் நிலவிய அந்நிய செலாவணி விகிதத்தில் வழங்கப்படவுள்ளன.

மேலும், பேருந்துகளை இயக்கி வருமானம் ஈட்டும் போது, ​​நான்கு ஆண்டுகளில் பணத்தை செலுத்தும் வசதியை வழங்கவும் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான தொழிநுட்ப குழு, நாட்டிற்கு மிகவும் சாதகமான முடிவாக இருந்தும் சில காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை தாமதப்படுத்தியமை வருத்தமளிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேருந்துகளின் அனைத்து உதிரிபாகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான முழுப் பொறுப்பையும் அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை மற்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் சான்றிதழ்களின் அடிப்படையில் முன்னோடி திட்டமாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் தேவையான பாடசாலைகளுக்கு இந்த பேருந்து வழங்கிவைக்கப்பட்டு, பாடசாலை சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |