*Kurunews.com*
*மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய இருதய நோய் சத்திர சிகிச்சை நிலையம்.*
நாட்டில் பிறப்பில் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகும் சுமார் 1,500 சிறார்களின் இருதய நோய்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பாரிய சிகிச்சை நிலையமொன்று மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் நேற்று (9) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின்ஸ்ரீ சத்யசாய்பாபா பவுண்டேஷன் இலங்கை அரசின் சுகாதார அமைச்சுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைய சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறுவர் இருதய சத்திர சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரியும் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மருமகளின் முன்னெடுப்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஐக்கிய இராஜ்யத்தின் பிர்மிங்காம் நகரில் செயற்படும் பிரபல வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் குழுவே இச்சிறுவர் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பிறப்பிலேயே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருதய நோய்க்குள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் சுமார் 1,500 பேர் மாத்திரமே தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறுவர் சத்திர சிகிச்சை நிலையம் அமைந்துள்ள கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 1,500 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்குறைபாட்டைத் தீர்த்து வைக்கும் வகையிலேயே ஸ்ரீ சத்ய சாய்பாபா சரணாலயத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் இந்த
சத்திர சிகிச்சை கூடம் செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்படும் சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு வசதி செய்வதற்கும் இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் திறப்பு விழா தொடர்பாக இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பி வைத்துள்ள செய்தி மடலில், நாடு எதிர்நோக்கும் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் சிறுவர்களுக்கான இருதய சத்திரசிகிச்சை கூடத்தை நிறுவுவதற்கு முன் வந்த பகவான் சாய்பாபா நிர்வாகத்தினருக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் இது போன்ற பல்வேறு வசதிகளை சாய்பாபா ஆலயம் திட்டமிட்டுள்ளது பற்றி மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Comments