Home » » புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை! நாடாளுமன்றத்தில் பொன்சேகா வெளிப்படை

புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை! நாடாளுமன்றத்தில் பொன்சேகா வெளிப்படை


 "காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடக்கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். அது இந்நாட்டின் விடுதலைக்கு வழிவகுக்கும்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"மக்கள் பாதுகாப்பு கருதியே முன்னர் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அரசின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மே - 9 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாமும் கவலை அடைகின்றோம். ஆனால், அலரிமாளிகையில் இருந்துதான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, ஏனைய கட்சிகள்மீது பழிசுமத்திவிட்டு, தப்புவதற்கு ஆளுந்தரப்பு முற்படக்கூடாது.

எமது கட்சிக்காரர்கள் தவறிழைத்தால்கூட தண்டனை வழங்கப்படவேண்டும். ஆனால், அலரிமாளிகையில் இருந்து வன்முறை தூண்டப்பட்டதால்தான் மக்கள் கொதிப்படைந்தனர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றியும் கருத்து வெளியிடப்பட்டது. அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவர், உங்கள் அணியில் பிரதமராகவும் இருக்கிறார். இதற்கிடையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் எனவும் தகவல் பகிரப்பட்டு வருகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடக்கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். அது இந்நாட்டில் விடுதலைக்கு வழிவகுக்கும்" என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |