நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கும் அவை தலைவர் தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்றன.
இதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டது. இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, தமக்கு அடுத்ததாக நாடாளுமன்றத்துக்கு தலைமை தாங்குவதற்காக தம்மை அழைத்த போதும், அவைத் தலைவர் தினேஸ் குணவர்த்தன, அதனை தடுத்ததாக சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.
தம்மை சபைக்கு தலைமை தாங்குமாறு படைக்கள சேவிதர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய தாம் தயாராக இருந்தபோதும், தினேஸ் குணவர்த்தன, சபாநாயகருக்கு அனுப்பிய சில தகவல்களின் அடிப்படையில் தமக்கு பதிலாக மற்றும் ஒருவர் சபைக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டமையானது, நாடாளுமன்ற உறுப்பினரான தமது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என்று சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.
தாம் ரணில் விக்கிரமசிங்கவின் (டீல்) வர்த்தகம் தொடர்பான விவாதத்தின்போது, தாம் சபைக்கு தலைமை தாங்குவதை தினேஸ் குணவர்த்தன விரும்பவில்லை என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்கு தினேஸ் குணவர்த்தன பதிலளிக்கவேண்டும் என்று சாணக்கியன் கோரினார்.
எனினும் சாணக்கியன், காலத்துக்கு காலம் இவ்வாறான பிரச்சினைகளை எழுப்பி வருவதாக தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்துக்கு தாம் பதிலளிக்கப்போவதில்லை என்றும் சபாநாயகரே பதிலளிக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதன்போது, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவை பேசுவதற்கு அழைத்தமையை அடுத்து, சாணக்கியனுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையில் கடும் தர்க்கம் தொடர்ந்தது.
0 comments: