Home » » அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி தவறிழைத்த கோட்டாபய

அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி தவறிழைத்த கோட்டாபய

 


நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முப்படையினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு, ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களை அடக்க ஒடுக்க இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் அவசரகால சட்டம் கோட்டாபயவினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மேலும் மேலும் தவறிழைத்துக் கொண்டு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உண்மையில் மக்களின் அன்றாட பிரச்சினை, மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற துன்பங்களை பிரதிபலிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இந்த நிலையில் அரசு மீண்டும் தவறிழைக்கின்றது.

அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்தி மீண்டும் மக்களை அடக்கி, ஒடுக்கும் செயல்பாட்டை கோட்டாபய செய்ய துணிகின்றார். அதை வன்மையாக கண்டிக்கின்றோம். அதனை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த நாட்டிலே மக்களை காப்பாற்ற முடியாத அரசு, இந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அரசு நாளாந்தம் மக்கள் படுகின்ற துன்ப துயரங்களை கருத்தில் கொள்ளாத அரசு இந்த அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்தி நிம்மதியாக இருந்து விடலாம் என்று நினைத்து விட முடியாது.

மக்கள் கிளர்ந்தெழுந்து உள்ளார்கள். இதனூடாக போராட்டங்களை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது பகல் கனவு. மக்கள் அரசுக்கு எதிராக தற்போது வீதிக்கு இறங்கி உள்ளார்கள்.

மக்களின் போராட்டம் தொடரும். எனவே கோட்டாபயவினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் மீளப்பெற பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |