ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை அரசாங்கத்தில் உள்ளடங்கிய குழுவினரின் நன்கு திட்டமிடப்பட்ட சதி என மக்கள் விடுதலை முன்னணியின் லைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள், வயதான தாய்மார்கள், தந்தைகள், பிள்ளைகள், மனைவிகள் மற்றும் கணவர்கள் என்ற குடும்ப ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதனை நம்ப முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தும் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் ஆர்ப்பாட்டங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வன்முறை செயல்களை தடுப்பது பொது மக்களின் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இவ்வாறான போராட்டங்கள் முடிந்த அளவில் சமாதானமாகவும், முன்னேற்பாடுகளின் கீழ் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் அதிகளவான பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அமைதியான முறையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் மீது இத்தகைய வன்முறை தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார் என்பதை பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவும், பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments