Advertisement

Responsive Advertisement

நாளைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் வலுச் சேர்க்க வேண்டும் - காணமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கோரிக்கை!

 




யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (01) மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர் வரும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும்.

கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் வருகை தந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பெண்கள், வயோதிபர்கள் என பார்க்காது காவல்துறையினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.

குறித்த தாக்குதலை கண்டித்தும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்து வருகின்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆகவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கும் உறவுகள் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நீண்ட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அவர்களின் உண்மையை கண்டறியவும், அவர்களின் நீதிக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments