Home » » உரிமைக்காக போராடும் தமிழர்களையும் சிங்களவர்களையும் சுட்டுக் கொல்வதே அரசாங்கத்தின் நோக்கம்!

உரிமைக்காக போராடும் தமிழர்களையும் சிங்களவர்களையும் சுட்டுக் கொல்வதே அரசாங்கத்தின் நோக்கம்!


 ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த, மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள் சார்பாக ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ராஜபக்ச அரசாங்கம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வந்ததோ, அப்போதெல்லாம் உரிமைக்காக போராடியவர்களை சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். அன்று மண்ணெணெய் கேட்டு போராடிய மீனவர்களை சுட்டுக்கொன்றார்கள்.

ரத்துபஸ்வெல பகுதியில் தண்ணீர் கேட்டு போராடியவர்களை சுட்டுக்கொன்றார்கள். இன்று உரிமைக்காக போராடுகின்ற இளைஞர்களை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இந்த செயற்பாடானது ஜனநாயகத்திற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள பாரிய சவாலாகும்.

ஒரு ஜனநாயக நாட்டில் உரிமைக்காகவும், தங்களுடைய கருத்துகளை சுதந்திரமாக சொல்வதற்கும் அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உண்டு. அந்தவகையில், அதனை இல்லாது செய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்கின்றது.

இன்று இலங்கையில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் சர்வதேச சமூகம் எம்மை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஒரு புறம் மனித உரிமை மீறல், யுத்த குற்றச்சாட்டுகள் என சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றது.

ரம்புக்கனை சம்பவமானது இலங்கையில் மேலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது மேலும் எங்களுடைய பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும். சுற்றுலாத்துறை பாதிக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையில் முதலிடப்படமாட்டாது.

வெளிநாடுகள் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவி செய்வதை மீண்டும் ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை குழுவினர் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் உங்கள் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றதே என்ற கேள்வியை முன் வைத்தால் இவர்கள் கூற போகும் பதில் என்ன? எனவே இளைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுடைய எதிர்ப்பார்ப்புகளை புரிந்து கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். கடந்த காலங்களை போல இளைஞர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களை தூண்டிவிட்டு ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற ஒரு சந்தேகமும் எழுகின்றது.

வீதியில் இறங்கி போராடுகின்ற இளைஞர், யுவதிகள் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |