பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தற்போதைய நிலைப்பாட்டை எண்ணும் போது மனம் உடைந்து போவது போல் உணர்வதாக அவரது நீண்டகால அரசியல் நண்பரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது அவர் தெரிவித்துள்ளதாவது,
மகிந்தவின் நிலைமையை நினைக்கும் போது மனம் உடைந்து போகிறது. உண்மையில் மகிந்த எனது நல்ல நண்பர் என்பதுடன் போராட்ட தோழர். நாங்கள் பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றோம்.
சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அவை அனைத்தையும் செய்த மகிந்த தற்போது நடுநிலைமையாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காணப்படும் நிலைமைக்கு அமைய அவர் அமைதியான நிலைப்பாட்டுக்கு வந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
எதனையும் செய்ய முடியாது என்பதால், அந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இதனை ஊகிக்கின்றேன். எனினும் உண்மையான கதை என்ன என்பது எனக்கு தெரியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர். இருவருக்கும் இடையில் சுமார் 6 தசாப்தத்திற்கு மேலான நட்பு இருந்து வருகிறது.
விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட போது, வாசுதேவ நாணயக்காரவையும் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டிருந்ததுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலையிட்டே அதனை தடுத்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையிலான நீண்டகால நட்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது
0 Comments