உக்ரையினில் யுத்தமொன்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலான இராஜதந்திர முயற்சியாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron), அந்த நாட்டு அதிபர் விளாடிமீர் புட்டீனுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
தலைநகர் மொஸ்கோவில் தரையிறங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த பிரான்ஸ் அதிபர், நெருக்கடியை தணிப்பது தொடர்பில் நியாயமான நம்பிக்கை இருக்கின்ற போதிலும் அற்புதங்கள் நிகழும் என தாம் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.
உக்ரையினுடனான எல்லைகளில் சுமார் ஒரு இலட்சம் துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளதன் மூலம் அந்த நாட்டின் மீது படையெடுப்பதற்கு ரஷ்யா தயாராகிவருவதாக எச்சரிக்கைகள் விடுக்கப்படும் நிலையில், ஐரோப்பாவில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
அவ்வாறான ஒரு போர் நிகழுமாயின் ஐரோப்பா பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பதற்றத்தை தணிக்கும் இராஜதந்திர முயற்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் களமிறங்கியுள்ளார்.
அந்த வகையில் நேற்று ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை சென்றடைந்துள்ள இம்மானுவேல் மெக்ரோன், அந்த நாட்டு அதிபர் விளாடிமீர் புட்டீனுன் பேச்சு நடத்தியுள்ளார்.
முன்னதாக உக்ரையினில் போரைத் தவிர்ப்பதற்கான உடன்படிக்கையை எட்டுவது சாத்தியமான ஒன்றென கருதுவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் கூறியிருந்தார்.
எனினும் ரஷ்யா, தனது சொந்த நாட்டின் பாதுகாப்பு கரிசனைகளை முன்வைப்பதற்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளது எனவும் ரஷ்யாவிற்கும் உரிய மதிப்பை வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
எனினும் உக்ரையினின் இறையாண்மையானது விவாதத்திற்குரிய ஒன்று அல்லவெனவும் பிரான்ஸ் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ பாதுகாப்பு கூட்டணியில் உக்ரையினின் உறுப்புரிமையை நிராகரிக்க வேண்டும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை ரஷ்யா முன்வைத்துள்ளது.
மேற்குலக நாடுகள், இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துள்ளன. எனினும் அணு ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு நடத்துவதற்கு அந்த நாடுகள் முன்வைத்துள்ளன.
பாரிஸ்சில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக கருத்து வெளியிட்ட இம்மானுவேல் மெக்ரோன், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீனுடனான பேச்சுவார்த்தையானது, இராணுவ மோதல் வெடிப்பதை தடுப்பதற்கு போதுமானதாக இருக்கும் எனவும் புட்டீன் பரந்துபட்ட பிரச்சினைகளை திறந்த மனதுடன் விவாதிப்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
0 Comments