சில அமைச்சுக்களின் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களுக்கும் இடையில் மட்டுமன்றி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடையேயும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இராஜாங்க அமைச்சின் செயலாளரை கூட தமது அதிகாரிகளால் சந்திக்க முடியாத நிலை காணப்படுவதாக வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் பல அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சுக்களின் பணியை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சுக்களின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களின் அமைச்சுக்கள் விடயங்களை இலகுபடுத்துவதற்காகவே வர்த்தமானி மூலம் ஒதுக்கப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
0 comments: