Home » » பல தசாப்தங்களாக கவனிப்பாரற்று இருந்த சம்மாந்துறை உள்ளக வீதிகள் சில 60 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பு !

பல தசாப்தங்களாக கவனிப்பாரற்று இருந்த சம்மாந்துறை உள்ளக வீதிகள் சில 60 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பு !

 



(நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், ஐ.எல்.எம். நாஸிம்)

மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட புளியடி வீதி, கஞ்சர் வீதி, பண்டு வீதி ஆகிய வீதிகளை கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்து உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு  சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் அஸ்பர் உதுமாலெப்பையின் பங்கெடுப்புடன் இடம்பெற்றது.

சுமார் 60 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நடைபெற்ற இந்த அபிவிருத்திகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கே. கோவிந்தசாமி, சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், கிராம  நிலதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2.8 கிலோமீட்டர் நீளமுள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யவும் இந்த திட்டத்தை சம்மாந்துறை பிரதேசத்தில் செயல்படுத்த முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக அமைந்த அமைச்சர்கள் உட்பட அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக இங்கு பேசிய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான அஸ்பர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் கடந்த சுனாமி காலத்தில் பல ஊர்களுக்கே சோறு போட்ட சம்மாந்துறை மக்கள் அரிசிக்கும், பருப்புக்கு சில்லறை காசுகளுக்கும் தனது வாக்குகளை அளித்தமை வருத்தமளிக்கிறது. அரசுடன் இணைந்து சென்றே எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன். நாம் பலமிக்க பெரும்பான்மை சக்தி கொண்ட அரசை எதிர்த்து எதிராளிகளாக மாற முடியாது என்பதற்கு தேர்தல் காலங்களில் அரசை எதிர்த்து பேசியவர்கள் இன்று வென்றுகொண்டு அரசுடன் ஒட்டி உறவாடுவதை பார்த்தாலே நாம் அறிந்து கொள்ளலாம். நமது வாக்குகளை நாம் வீணடித்தமையால் இன்று அரசியல் அனாதையாக இருக்கிறோம். எனக்கு நம்பி வாக்களித்த மக்களுக்கு நான் என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டிருக்கிறேன். எந்நேரத்திலும் மரணத்தை சுமந்து கொண்டிருக்கும் நான் எனது சேவைகளை தேர்தலை இலக்காக கொண்டு செய்வதில்லை என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |