வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையில் முதலமைச்சராக இருக்க விரும்புகின்றேன் என்று நான் இதற்கு முன்னர் அறிவித்திருந்தேன். எனினும் அப்போது அதனை நான் விளையாட்டுக்குத்தான் கூறியிருந்தேன். ஆனால் இப்போது அதனை சிந்தித்துப் பார்த்தால் அது ஒரு நல்ல திட்டம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நான் நிச்சயமாக அதனை விரும்புவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் எனது விருப்பத்தை நீங்கள் பார்க்கலாம். நான் இப்படி கூறியவுடன், சாணக்கியன் எவ்வாறு இப்படிக் கூற முடிவும் என்று என் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். இது என்னுடைய விருப்பம், எனது தனிப்பட்ட ஆசை.
கிழக்கில் எனது செயற்பாடுகளை பொறுத்தவரையில், நான் ஒருபோதும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி என்னுடைய அரசியலை நான் செய்யவில்லை.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை வெற்றிப் பெறச் செய்ய கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.
அதற்கு எதிராகத்தான் மயில், மரம், குதிரை போன்ற பலருக்கு வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்று விட்டு பின்னர் மொட்டுடன் போய் இணைந்து கொள்வார்கள் என அந்த மக்கள் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை.
தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை இல்லை என்றால் கிழக்கு மாகாணத்திலே இன்னும் ஒரு பத்து வருடத்தின் பின்னர் தமிழ் மக்கள் பெரும்பான்மை சமூகமாக வாழ மாட்டார்கள். இலங்கையிலே ஒன்பது மாகாணங்களிலே 7 மாகாணங்கள் பெரும்பான்மை சமூகம் கையிலே வைத்திருக்கும் மாகாணங்கள்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழவில்லை என்றால் எட்டாவது மாகாணமாக கிழக்கு மாகாணம் பெரும்பான்மை சமூகத்தினரின் கைகளுக்கு சென்று விடும் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments