திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குள விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தங்களுக்கான பசளையை பெற்றுத்தரக்கோரி பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்டார்.
சொகுசு அறையில் இருந்து கொண்டு விவசாயிகளை ஏமாற்றாதே, உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும், விவசாயம் அழிவில் மக்கள் பட்டினியில் நாடு நெருக்கடியில் இதுவா உங்களது வளமான எதிர்காலம்?
"வேண்டாம் வேண்டாம் சீனாவின் குப்பைகள் வேண்டாம் தா தா உரம் தா" போன்ற வாசகங்களை உள்ளடக்கியவாறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இம்ரான் மஹ்ரூப்,
இலவசமாக பசளையை தருவோம் என வாக்குறுதியளித்து விட்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் விவசாயிகளை பழி வாங்குகிறது. இந்த கால கட்டத்தில் பசளை செய்வதா விவசாயம் செய்வதா ஆர்ப்பாட்டம் செய்வதா என்ற நிலை உருவாகி 1970 களில் போன்று உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நீண்ட வரிசைகளில் நின்றே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. வீதியில் இறங்கி போராடுகின்ற போதும் அரசாங்கம் காது கொடுக்காது விவசாயிகளை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நாடு பூராகவும் விவசாயிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் அரச ஊழியர்கள் என வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள். இதனை அமைச்சர்களோ அரசாங்கமோ கண்டு கொள்ளவில்லை. வேடிக்கையாக நினைத்து மக்களை உதாசீனப்படுத்துகிறார்கள்.
கேட்டால் மரவள்ளி கிழங்கு கடலையை சாப்பிடுங்கள் என கூறி வருகிறார்கள். சீனாவின் குப்பைகளை இங்கு இறக்குமதி செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்க நினைக்கிறார்கள்.
இனிவரும் காலங்களில் கொரோனாவின் தாக்கம் காரணமாக ஏற்படும் மரணங்களை விட விவசாயிகளின் அழிவு மூலமான மரணங்களே அதிகரிக்கும். இதனை அரசதலைவர் கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கான உரத்தை வழங்க வேண்டும் என்றார்
0 Comments