623 அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100% உத்தரவாத தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நேற்று நடைப்பெற்ற மத்திய வங்கியின் நாணய சபைக் கூட்டத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதிகபடியான இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி வீத உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணய சந்தையின் திரவத்தன்மையினையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன் கீழ், கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், புடவைகள் மற்றும் உதிரி பாகங்கள், வளிசீராக்கல் இயந்திரம், சொக்லேட், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மோல்ட், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற 623 பொருட்கள் அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய நிபந்தனைகளின் கீழ் அவசரமற்ற மற்றும் அத்தியாவசியமற்ற இயற்கை பொருட்களின் இறக்குமதிக்கான கடன் வசதிகளை தடுக்க இலங்கை மத்திய வங்கி, அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கிக்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த பட்டியலிடப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்காக 2019 இல் 1057.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2020 இல் 871.2 மில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜூலை இறுதி வரை இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு 753.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது
0 Comments