Home » » கொரோனா தொற்றினால் நாடு ஆபத்தான நிலையில் : இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை.

கொரோனா தொற்றினால் நாடு ஆபத்தான நிலையில் : இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை.

 



நூருல் ஹுதா உமர்

கொவிட்-19 தாக்கமானது இந்த பிராந்தியத்தில் உச்சத்தை தொடும் அளவுக்கு இன்றைய நிலமை சென்று கொண்டு இருக்கின்றது. சில இளைஞர்கள் முகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்வதாகவும் வீதி ஓரங்களில் கூடி நின்று கதைத்து இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இளைஞர்கள் இந்த நோய் தாக்கத்திற்கு உட்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எமது நாட்டில் ஏற்படக் கூடிய இள வயது மரணங்கள் பற்றி சமூக வலைத் தளங்கள் மூலமாக இன்னும் பார்க்கவில்லையா என்று கேட்க விரும்புகிறேன் என்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற கருத்துக்கு மாற்றுக்கருத்தில்லை அதேபோன்று இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தில் வளர்ந்து வரும் சமூதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். எமது பிரதேசத்தில் மக்களுடைய பொருளாதாரம், உயிர்கள் மற்றும் ஏனைய அடிப்படை தேவைகளை முடக்கி மனித வாழ்க்கை வட்டத்தினை சிதைவடையச் செய்யும் கொவிட்-19 கொரோணா பற்றி நமது இளைஞர் சமூதாயம் அறியாமலும் இல்லை. இதனுடைய தாக்கத்தினை உணராமலும் இல்லை.

வீணாக வீதிகளில் உலாவுவதன் மூலம் இளைஞர்கள் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டால் அவர்களது குடும்பத்தில் வயது முதிர்ந்த பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள் அவர்கள் இந்த நோய் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க சக்தி வாய்ந்தவர்களாக உள்ளார்களா என்று சற்று சிந்திக்க வேண்டும். இளைஞர் சமூதாயம் அத்தியவசியத் தேவையின்றி வெளியே செல்லாதீர்கள், வெளியில் செல்ல வேண்டிய கட்டாய தேவையென்றால் முகக் கவசத்தினை முறையாக அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 கொவிட்-19 கொரோணா தொற்றாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக  சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதற்கு எமது அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர் குழு தீர்மானித்துள்ளது. எமது சுகாதார வைத்திய அலுவலக பிரிவில் கடந்த சில தினங்களாக அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் மரணங்களும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், உள் வீதிகள், பிரதான வீதிகள் மற்றும் சன நெரிசலாக கூடும் இடங்களில் பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு எதிராக பீ .சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக நடவடிக்கைகளும் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |