Home » » இணையவழி கல்வி பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை மேன்மைப்படுத்துமா?- கட்டுரை

இணையவழி கல்வி பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை மேன்மைப்படுத்துமா?- கட்டுரை

 


இன்று கொவிட் 19 (கொரோனா) வைரஸின் தாக்கம் 

இணையவழி கல்வி பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை மேன்மைப்படுத்துமா?- கட்டுரை

நமது நாட்டில் மாத்திரமின்றி உலகநாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது. ஓராண்டுக்கு மேலாக இந்நோய் தொடர்பான சர்ச்சை உலக நாடுகளிலே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.இந்நோயைக் கட்டுப்படுத்த அவ்வவ் நாட்டின் அரசுகள் மற்றும் உலக சுகாதார அமையம் போன்றன நடவடிக்கை எடுத்த போதிலும் அதையும் தாண்டி தொற்றுநோய் பரவல் தீவிரம் அடைந்தே காணப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கங்கள் தமது நாடுகளை முடக்கி பயணத்தடைகளை விதித்து மக்கள் ஒன்று கூடுவதை தடுத்து வருகின்றது. இதனால் பல்வேறு சமுக பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் இந்நோயைக் கட்டுப்படுத்த வேறு மார்க்கங்கள் தற்போதைக்கு அரசுகளுக்கு குறைவு.

இவ்வாறான ஒரு நிலையில்தான் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது.

இன்று உலக நாடுகள் கொரோனா நோய் பரவல் காரணமாக நாட்டையும், பிரதேங்களையும் அடைத்துள்ளதுடன், அதையும் தாண்டி பிரயாணத் தடைகளையும் விதித்துள்ளமையால் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப பீடங்கள் மற்றும் கல்வியகங்கள் என்பனவற்றையும் மூடி பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் தொடர்ந்து கல்வி நிறுவகங்கள் மூடிக்காணப்படுவதனால் பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுகின்ற சூழல் காணப்படுகின்றது. இந்நிலையைத் தவிர்ப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைதான் இணையவழி கல்வி செயற்பாடாகும்.

இன்று இணையவழி கல்வி செயற்பாடு கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய பாடசாலை மட்டங்களிலும், தனியார் கல்வி நிறுவகங்கள் மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்களென பல்வேறு தரப்பினராலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இணையவழி கல்விச் செயற்பாட்டில் "சூம்" மற்றும் "வட்ச் அப்" போன்ற செயலிகள் பிரதான பங்கினை வகிக்கின்றன. இச்செயலிகளைப் பயன்படுத்த பிரதானமாக கணனிகள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் தேவை. இவை கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்கட்கும் தேவை. ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று அல்லது அதைவிட அதிகமான பிள்ளைகள் இருந்தால் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி கணனியோ அல்லது ஸ்மார்ட்போனோ தேவைப்படும்.

இது முதலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சாத்தியமா?
இலங்கை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாட்டில் அதிகமான குடும்பங்கள் வறுமையான குடும்பங்களே. இந்நிலையில் இக்குடும்பங்கள் கணனி மற்றும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதே சந்தேகம். அவ்வாறான நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் அவர்களது நிலை எவ்வாறு இருக்கும்.
அடுத்து இணையவழி கல்வியைத் தொடர்வதானால் வலையமைப்புக்கான சிக்னல் வேண்டும். ஆனால் அனைத்துப் பிரதேசங்களிலும் சிக்னல் கிடைப்பதில்லை. சிக்னல் கிடைக்கா விட்டால் அந்தப் பிள்ளைகளால் இணையவழி கல்வியைத் தொடர முடியாது.

மேலும் வட்ச் அப் செயலியினூடாக செயலட்டைகள், வீடியோ பதிவுகள் என்பன ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு மாணவர்கட்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவற்றினை பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் பிரதியெடுத்து, அதனைப் பிள்ளைகள் கற்க வேண்டும் அல்லது பயிற்சிகள் செய்ய வேண்டும். இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் புரியவில்லை. மாணவர்கட்கு விளங்காவிட்டால் பெற்றோரைக் கேட்க வேண்டும். பெற்றோருக்கும் விளங்கா விட்டால்..? அனைத்துப் பெற்றோரும் கற்றவர்கள் கிடையாது.

அதைவிட இதில் ஆசிரியர்கட்கும் வேலைப்பழு அதிகரித்தே காணப்படுகின்றது. ஆசிரியர்கள் செயலட்டையையோ அல்லது வீடியோ கிளிப்ஸையோ அனுப்பி விட்டால் அது தொடர்பாக என்ன நடக்கின்றது. பிள்ளைகள் ஈடுபாட்டுடன் இருக்கின்றார்களா என பெற்றோரைத் தொடர்பு கொண்டு அறிய வேண்டும்.அல்லாது அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். இதனால் நேரகாலமின்றி செயற்பட வேண்டியுள்ளது.

மேலும் சூம் செயலியினூடாக கற்பித்தல் செயற்பாடுகள் தற்போது பிரபலம் அடைந்து வருகின்றது. பாடசாலை ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடு ஒருபுறமிருக்க தனியார் கல்வி நிறுவனங்களும், தனிப்பட்ட ஆசிரியர்களும் பணத்திற்காக சூம் கல்வியை பாடரீதியாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான விளம்பரங்களும் ஆட்சேர்ப்பும் சமுக வலயத்தளங்களூடாக இடம் பெறுகின்றன.

கொரோனா வைரஸின் தாக்கம் வீட்டிலிருந்தே கல்வியைப் பெற வேண்டிய தேவையைப் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது துரதிஸ்டவசமே. பாடசாலைகள் இயங்கிய போது மாணவர்களுக்கான கல்வி வகுப்பறைகளிலே வழங்கப்பட்டது. வகுப்பறைகளில் 15 தொடக்கம் 35 வரையிலான மணவர்கள் கல்வி கற்பார்கள். சிலவேளை இந்த எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையவும் கூடும்.

வகுப்பறையில் மாணவர்களை வைத்து நேராக கற்பித்தும் கூட எத்தனை மாணவர்கள் வகுப்புக்களில் தேர்ச்சியடைகின்றார்கள்? அதையும் தாண்டி தரம் ஐந்து, க.பொ.த.சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சியடைகின்றனர்? நேருக்கு நேராக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் கற்பித்தும் கூட முழுமையாக மாணவர்களை தேர்ச்சியடைய வைக்க முடியாதுள்ள சூழலில் இணையவழிக் கல்வி எந்தளவிற்கு பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் தாக்கத்தை செலுத்தும் என்பதே எமது கேள்வி.

சிலவேளை எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இணையவழி கல்விச்செயற்பாட்டின் மூலம் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியும், இது வெற்றிகரமான விடயம் என எடுத்துக்கொள்வோமாக இருந்தால், இவ்வாறான நடைமுறையை கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களத்தினால் ஏன் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது?
தொடர்ந்து மேற்கொண்டால் பாடசாலைகள் தேவையா?
கொரோனா தொற்றுநோய் பரவல் ஏற்படுவதற்கு முன்னர் மாணவர்கள் கைபேசி மற்றும் கணனிகள் பயன்படுத்தக்கூடாது எனவும் இதுவே மாணவர்களின் கல்வியை மிக மோசமாகப் பாதிக்கின்றது எனவும் கூறி பிள்ளைகளுக்கு இவற்றை வழங்காது பாடசாலைகளிலும், வீட்டிலும் தடுத்திருக்கின்றோம்.

இன்று நாமே தங்கத்தட்டில் வைத்து அவர்கள் கையில் கொடுத்திருக்கின்றோம். இதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திரு. க.நல்லதம்பி
ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |