Home » » கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக மூன்று பிரதேச செயலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன!!

கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக மூன்று பிரதேச செயலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன!!

 


எப்.முபாரக்

கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக மூன்று பிரதேச செயலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி, திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரிவு, மூதூர் பிரதேச செயலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக ஊழியர்கள் பன்னிரெண்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை அடுத்து பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் நேற்று(5) முதல் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் மேலும் தெரிவிக்கையில்:

எமது பிரதேச செயலகத்தில் ஒரு பிரிவில் கடமையாற்றும் சில ஊழியர்கள் காய்ச்சல் காரணமாக விடுமுறையில் இருந்தனர் அவர்கள் தாமாகவே சென்று பீ சீ ஆர் பரிசோதனையை மேற்கொண்டனர். அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அப்பிரிவில்கடமையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பீ .சீ .ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை இதனையடுத்து அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுகாதார நிலையை கருத்திற் கொண்டு அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. முதற்கட்டமாக 60 ஊழியர்களுக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும். அதன் முடிவினையடுத்து சுகாதார துறையினரின் ஆலோசனையைப் பெற்று பிரதேச செயலக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார் .

அத்துடன் திருகோணமலையில் ஏற்பட்டுள்ள கோவிட் அதிகரிப்பு காரணமாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரிவு மற்றும் மூதூர் பிரதேச செயலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரிவு செயலக பிரதேச செயலாளர் பொ. தனேஸ்வரன் மற்றும் நிருவாக அதிகாரியும் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டார்கள்.

இந்நிலையில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் செயலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதுபற்றி மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக் தெரிவிக்கையில்:

நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் வைரசின் 3வது அலை காரணமாக, நாளாந்தம் 1500க்கு மேற்பட்டோர் புதிதாக தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.

நமது திருகோணமலை மாவட்டத்திலும் நாளொன்றிற்கு 50 புதிய தொற்றாளர்கள் இனம்காணப்படுகின்றனர். அதுபோல் இதுவரை 14 பேர் மரணித்துள்ளனர்.

மூதூரிலும் இரண்டு மரணங்கள் நிகழ்ந்திருப்பதோடு புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.எனவே மிகவும் அபாயம் நிறைந்த இக்காலத்தில் நமது பிரதேசத்திலிருந்து கொடிய கோவிட் வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைவாக, மூதூர் பிரதேச செயலகம் பின்வரும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு பொது மக்களாகிய அனைவரும் பூரண ஒத்தழைப்பு வழங்குமாறு கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறோம். நேற்று(5) முதல் மூதூர் பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது.

எனவே பிரதேச செயலகத்திற்கு சேவைகளை நாடி வருவதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிக அவசியமான தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமுள்ளவர்கள் தங்களது கிராம உத்தியோகத்தரை அனுகி குறித்த சேவையை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |