துறைமுக நகர், சட்ட மாஅதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் சீனத் தூதுவரை இதற்கு முன்னர் சந்தித்து விளக்கியிருந்த போதிலும் அதனால் எந்தவொரு பயனும் ஏற்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமிழைத் தவிர்த்து, இலங்கையின் மொழிச் சட்டத்தை சீனர் மீறுகிறார்கள் எனவும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மாத்திரமுள்ள பெயர் பலகைகளும் உள்ளன எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இந்நிலை தொடருமானால் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் தமிழை எவ்வாறு புறக்கணிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா அரசிடமே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
சீனா முன்னெடுக்கும் திட்டங்களைத் தவிர உள்நாட்டிலேயே தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட நினைவுபலகை வைக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனது அதிப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவது புதிதான விடயம் அல்லவென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
0 Comments