Advertisement

Responsive Advertisement

இலங்கைக்கு வரவிருக்கும் பேராபத்து!! இணைந்து பணியாற்ற முடியாத சூழல் - அம்பலப்படுத்திய ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர்


தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாது அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருவதாக இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் அடமா டியங்க் (Adama Dieng) தெரிவித்திருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மானிடப் பேரவலத்தின் நினைவுகளாக நம்மிடையே உள்ளது. நினைவுகளை மறுத்துவிட்டு ஒருபோதும் உண்மையைப் பரிசோதித்துவிட முடியாது.

கடந்த காலத்து நினைவுகளை மீட்டுவது நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையைக் கொண்டுவர உதவுவதாக இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இதுபோன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத, அதில் முழுமையான ஈடுபாடு காட்டாத அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாக்குவதை நாங்கள் கண்டுள்ளோம். அவ்வாறு ஓர் அரசு செயற்பட்டு தன்னுடைய பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால், அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

ஆனால், எந்த மண்ணில் கொடுமைகள் நிகழ்ந்தனவோ அந்த நாட்டின் அரசு என்ற வகையில் இலங்கையைத் தள்ளிவைத்து விட்டுப் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுத்துச் சென்றுவிடவும் முடியாது என்பதிலும் கரிசனை கொள்ளவேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் நிலைமைகளுக்குப் பின்னர் அதனையொரு காரணமாகப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் இருந்து இலங்கை அரசு மேலும் பின்வாங்குகின்ற சூழல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டியும் உள்ளது.

தற்போதைய ஆட்சியில் இலங்கை ஒரு பாரதூரமான நிலைமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்கி அதன் நடவடிக்கைகளை “முரண்பாடுகளுக்கான விதைகளைத் தூவுதல்” என்று தலைப்பிட்டு கடிதம் ஒன்றை முன்னாள் ஐ.நா.செயலாளர்களுடன் இணைந்து வெளியிட்டிருக்கின்றேன்.

இலங்கையில் வரவிருக்கும் பேராபத்தை அங்குள்ள தற்போதைய நிலைமைகள் முன்கூட்டியே உணர்த்துகின்றன. ஜனநாயகத்துக்கான இடைவெளி சுருங்கி வருகின்றது என்ற எச்சரிக்கையை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்ததேன்” என்றார்.

Post a Comment

0 Comments