கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று செங்கலடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தற்பொழுது அண்மையில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் இந்த கல்முனை பிரதேச செயலக விடயம். கடந்த காலத்தில் இந்த கல்முனை பிரதேச செயலக பிரச்சனையை சிறந்த முறையில் முன்னெடுத்து ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சர்களுக்கு பிரதம மந்திரி மற்றும் பல துறை சார்ந்த அதிகாரமிக்க அமைச்சர்களிடம் அனைவரிடமும் நாம் இந்த விடயம் தொடர்பாக முன்னெடுத்து வந்தோம். இந்த வேலை திட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது உண்மையில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதி கூட, இது நீண்டகால பிரச்சனையாக உருவெடுத்து தற்பொழுது முடிவுறும் தருவாயில் இதற்கான முடிவுகளை நிறைவேற்றும் அல்லது முடிவுறுத்தும் கட்டத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்டு பல அரசியல்வாதிகள் இதை அரசியலாக்கி அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்காக இந்த பிரதேச செயலகத்தை பயன்படுத்தி இன்று அனைவரின் வாயைத் திறந்தாலும் அதுதான் கதையாக உள்ளது.
இது அம்பாறை மக்களின் வாக்கு பிரச்சனை அல்ல எமது இனத்தின் இருப்பை பாதுகாப்பதற்கான ஒரு பிரச்சனை ஆகவே இந்த இடத்தில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் நான். இது தொடர்பாக எங்களுடன் சேர்ந்து அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் பிரதிநிதித்துவங்கள் அனைவருக்கும் இது சம்பந்தமாக கதைப்பதற்கு உரிமை உள்ளது ஆனால் அதை உரிய முறையில் நாகரீகமான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள்
0 Comments