Advertisement

Responsive Advertisement

நாட்டை முடக்க முடியாது நாளாந்தம் 25,000 PCR முன்னெடுக்கப்படுகின்றன ! நாளொன்றுக்கு 440 இலட்சம் ரூபா செலவாகின்றன

 




அவசியம் தேவையான அனைத்து தடுப்பூசி, உபகரணங்களுக்கு அரசு ஏற்பாடு


நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது.தற்போதுள்ள நிலையில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக நாளொன்றுக்கு 440 இலட்சம் ரூபா செலவாகின்றன. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்குவதே ஒரே தீர்வாகும். அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமாக முழுமையாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்தார்.

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை முடக்கி எவ்வாறு வருமானத்தை பெற்றுக்கொள்வது என்ற கேள்வியை நாம் எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்க வேண்டியுள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்குவதே எமது பிரதான வேலைத்திட்டமாகும். தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலமாக முழுமையாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமெனவும் அதேபோல் மக்களை சுகாதார வழிமுறைகளுக்குள் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கின்றோம். இதனால் இறப்பு வீதங்களை குறைக்க முடியும்.



09 இலட்சத்து 25 ஆயிரத்து 240 நபர்களுக்கு கொவிசீல்ட் தடுப்பூசிகள் முதலாம் தடுப்பூசியாக ஏற்றப்பட்டுள்ளன. இரண்டாம் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியையும் இலங்கையில் பயன்படுத்த ஒளடத கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. 13 மில்லியன் தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும். அதேபோல் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 8.4 மில்லியன் அஸ்ரா செனெகா தடுப்பூசிகளும், அமெரிக்காவின் உற்பத்தியான பைசர் தடுப்பூசிகள் 5 மில்லியனும், சீன உற்பத்தியான சைனோபார்ம் தடுப்பூசிகளும் ஆறு இலட்சமளவில் தற்போது கைவசம் உள்ளது.

சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தவுடன் மேலதிகமாக சைனோபார்ம் தடுப்பூசிகளை வழங்கவும் சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் 63 வீதமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தடுப்பூசி நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளோம். ஆகவே உலகில் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிகராக நாமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Post a Comment

0 Comments