Home » » இறுதித் தீர்வு கைவசம் - அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டாபய

இறுதித் தீர்வு கைவசம் - அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டாபய


கொரோனா தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது.

இந்தச் சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு தொற்றுப் பரவிய முதல் சுற்றின் போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள அனைத்து சட்டதிட்டங்கள், வழிகாட்டல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது அங்கீகரித்துள்ள மற்றும் எதிர்காலத்தில் அங்கீகாரம் வழங்கவுள்ள கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கொவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலை ஒழிப்பதில் முக்கிய இடம் வகிப்பது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதாகும் என உலக சுகாதார தாபனத்தின் தலைவர் நேற்று ஜெனிவாவில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உரிய முறையில் முகக் கவசங்களை அணிவது, சவர்க்காரம் அல்லது தொற்று நீக்கிகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல், தேவையற்ற பயணங்கள் மற்றும் விழாக்கள் போன்றவற்றில் இருந்து தவிர்ந்து இருப்பது இவற்றில் முக்கியமானதாகும்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது, ஒழுக்கப்பண்பாடான சமூக நடத்தைகள், வைரஸ் தொற்றை தடுப்பதற்கு சிறந்த தீர்வாகும் என்பது அநேக நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான அனுபவமாகும்.

கொவிட் 19 பிரச்சினைக்கு தீர்வாக சில காலம் நாட்டை மூடி வைக்க வேண்டுமென சிலர் எண்ணுகின்றனர்.

ஆரம்ப காலகட்டங்களில் அத்தகைய நடைமுறையின் மூலம் திருப்தியான பெறுபேறு கிடைக்கப்பெற்றபோதும் நீண்ட காலத்தில் அது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பொருளாதார செயற்பாடுகளை முற்றாக முடக்கிவிடக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு செய்ய முடியாது.

எமது நாட்டின் வருமானம் ஈட்டும் பெரும்பான்மையானவர்கள் ஒழுங்குபடுத்தப்படாத வாழ்வாதார வழிகளில் தங்கியுள்ளனர்.

எனவே அரசாங்கம் தனது பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களும் நாட்டினதும் தம்முடையதும் நலனைக் கருத்திற்கொண்டு தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |