Home » » பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கு பாராளுமன்ற உப குழுவொன்று நியமனம்!

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கு பாராளுமன்ற உப குழுவொன்று நியமனம்!


 பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்க பாராளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய இரு அமைச்சுக்களும் இணைந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், சிவஞானம் சிறிதரன், வீரசுமன வீரசிங்ஹ, சாகர காரியவசம், அமரகீரித்தி அத்துகோரல, டயனா கமகே, (மேஜர்) சுதர்ஷன தெனிப்பிட்டிய உள்ளிட்ட எட்டுப்பேரைக் கொண்ட குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளராக பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக செயற்படுவார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி , சட்டம் தொடர்பில் பொதுமக்களின் அறிவு மிகவும் குறைவான மட்டத்திலேயே காணப்படுவதாகவும், சட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலை நாட்டிலுள்ள மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

முன்னேற்றமடைந்த நாடுகளில் அடிப்படை சட்டம் தொடர்பில் குடியியல் கல்வி வழங்கப்படுவதாகவும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சட்ட அறிவை இணைப்பது அவசர தேவை என்றும் நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகக் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இந்தக் குழு தனது யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இதன் பின்னர் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டம் பாடத்திட்டத்தில் விரைவில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |