Home » » நீங்கள் உண்மையான இலங்கையரா? தமிழ் எம்.பிக்களிடம் சவேந்திர சில்வா கேள்வி

நீங்கள் உண்மையான இலங்கையரா? தமிழ் எம்.பிக்களிடம் சவேந்திர சில்வா கேள்வி

 


தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவ வைத்தியசாலைகளில் கொவிட் தடுப்பூசி பெற தயாராக இல்லை என தமிழ் கட்சிகள் சில தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து கூறும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

எம்மிடம் இருப்பது மனிதாபிமானமிக்க இராணுவமாகும். எங்களுக்கு மறைக்க ஏதுவும் இல்லை.

நாட்டு மக்கள் தங்களது மனங்களை தட்டிக் கேட்டால் இலங்கை முப்படையினர் எத்தகைய மனிதாபிமானமிக்கவர்கள் என்பது தெரியும். முதன்மை கடமையான நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு மேலதிகமாக நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பு எத்தகையது என்பதையும் அத்தோடு இவர்கள் கூறிய காரணங்களுடன் நாட்டு மக்கள் உண்மைத் தன்மையை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இது நம் நாட்டின் இராணுவத்தைப் பற்றியது. இராணுவ வைத்தியசாலைகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற இவர்களுக்கு மறுக்க முடியாது. உண்மையான இலங்கையர் என்றால் இவ்வாறான அறிக்கையை விடுக்க முடியாது.

இலங்கையர் அல்லாதவர்களே இலங்கை இராணுவத்தினர் மீது இவ்வாறான அபிப்பிராயங்களை கொண்டிருக்க முடியும்.

இது ஜனநாயகத்தை உயர்வாக மதிக்கும் நாடு. அத்தகைய நாட்டில் யாரும் தங்கள் விருப்பப்படி எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியும். ஏனெனில் தடுப்பூசி பலவந்தமாக ஏற்றும் ஒன்றல்ல.

இந்த கொவிட் தடுப்பூசியை இராணுவ வைத்தியசாலைகளில் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு தனிநபராக அல்லது குழுவாக விரும்பவில்லை எனில் அது அவர்களின் தனிப்பட்ட தீர்மானமாகும்.

அதனூடாக அவர்களின் மனோநிலை மற்றும் நிலைப்பாட்டை தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.

மக்களிடம் நெருங்கி தொழிற்படுபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இவ்வாறு புறக்கணிப்பதானது மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகின்றது.

ஆனால் நாங்கள் எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் இலங்கையர்களாக கருதியே சேவையாற்றுகின்றோம் என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |