Home » » சீன அரசின் அனுசரணையோடு எம் இனத்தை அழித்த அரசு நாட்டையும் சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது!

சீன அரசின் அனுசரணையோடு எம் இனத்தை அழித்த அரசு நாட்டையும் சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது!

 


சீன அரசின் அனுசரணையோடு எம்மை அழித்த அரசு நாட்டை சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி குறித்து என்னிடம் வாய்மொழி மூல முறைப்பாட்டினை பெற்று சென்றுள்ளனர். இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழ் சமூகத்தின் கலை கலாசார விடயங்களிலும் சிவில் அமைப்புக்களினாலும் பெரும்பான்மை சமூகத்தினதும், தாக்கம் அதிகரித்ததன் காரணமாகவே மக்களின் உணர்வு, உரிமை ரீதியான பேரெழுச்சியாகவே பார்க்கின்றது.

இதில் அரசாங்கத்திற்கு ஒரு விடயத்தை மக்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். தங்களுடைய பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ விட வேண்டும் என்பதையே உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமல் மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மை துன்புறுத்தும் வேலையை அரசு மேற்கொள்கின்றது. அவ்வாறு தொடர்ந்தும் இருக்க முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகம் , சுதந்திரம் குறித்து பேசுகின்றனர். ஆனால் சிறுபான்மை சமூகமாகவுள்ள எங்களுக்கு நீதி, சுதந்திரம் கிடைக்கப்பெறுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

எங்கு சென்றாலும் தமிழர்கள் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் இந்த அரசுகளால் நசுக்கப்படுகின்ற சூழல்தான் இருக்கின்றது. இந்நிலை மாற வேண்டும். இந்த நாட்டின் தலைவர் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதனை மறந்து பௌத்த மக்களுக்கு தான் தலைவர் என்ற வகையில் பௌத்த தேரர்களின் சொற்படியே ஆட்சி செய்வேன் என்ற வகையில் கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதனை நோக்கும் போது ஜனாதிபதியால் சிறுபான்மை சமூகம் வேறாகத்தான் பார்க்கப்படுகிறது. இங்கு நிலையான சமாதானமும் இல்லை சமத்துவமும் இல்லை என்பதனை ஒவ்வொரு விடயத்திலும் சுட்டிக்காட்ட முடியும். அரசியல் அபிவிருத்தி , தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களில் வேறுபட்ட சிந்தனையுடன் தான் செயற்படுகின்றனர்.

தொடரான சமாதானத்தை ஏற்படுத்த இந்த அரசாங்கம் எந்த முன்னெடுப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்பதனை அவர்களது கடந்த கால செயற்பாடுகள் காட்டிக்கொண்டு இருக்கின்றன. தமிழர்களின் நீண்ட கால பிரச்சினைகளில் அரசாங்கம் எந்தவொரு தீர்வை நோக்கியும் நகரவில்லை என்பதனை இந்தியா அடிக்கடி ஸ்ரீலங்காஅரசினை கண்டிப்பதன் காரணமாக இன்று அரசு இந்தியாவை கூட வஞ்சித்துள்ளது.

இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, யாழ் தீவக பகுதிகளை கூட சீன அரசுக்கு தாரை வார்த்திருக்கும் விடயம் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு செல்லும். ஏனென்றால் இந்தியா நேச நாடு.

யுத்த காலத்தில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியிருந்தாலும் சீனா மிக மோசமான ஆயுதங்களை வழங்கியதால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று சீன மொழி பொறிக்கப்பட்ட விளம்பர பலகைகள் கூட காட்சிப்படுத்தப்படுகின்றன.

சீன ஆதிக்கத்திற்கு உட்பட்ட காலணித்துவ நாடாக மாறிவருகின்றது. இது பாரிய ஆபத்தினை இலங்கைக்கு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |