Home » » பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு நடைபவனிப் போராட்டதிற்கு கனடியத் தமிழர்களின் முழுமையான ஆதரவு..!!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு நடைபவனிப் போராட்டதிற்கு கனடியத் தமிழர்களின் முழுமையான ஆதரவு..!!

 


இப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக கனடாவில் மாபெரும் 'வாகனப்பேரணி' ஞாயிற்றுக்கிழமை 02-07-2021 இல் கனடியத் தமிழர் சமூகமாக முன்னெடுக்கின்றனர்.


எமது தாயகத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அமைதி வழிப் போராட்டமானது, எமது உறவுகளால் மிக நீண்ட கவனயீர்ப்பு நடைப் பயணமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இன்றைய காலச் சூழலில், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் சொல்லவொண்ணாத் துயரங்களைச் சுமந்து வாழும் எமது மக்கள், தொடர்ச்சியாக அனுபவித்து வரும் இலங்கை அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பெருமளவில் கிளர்ந்துள்ளார்கள் என்பதை இந்த அமைதி வழிப் போராட்டமானது உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது. நோய்த் தொற்றுக் காலச் சூழல், சீரற்ற காலநிலை, அடக்குமுறை வாழ்வு, எல்லாவற்றையும் தாண்டி, எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற தாயகம் சார்ந்த கோட்பாட்டில் இணைந்து, ஒருமித்து எமது மக்கள் எழுப்பும் குரல் நிகழ்காலத் தாயகத்தின் நிதர்சனம் என்பதை நாம் அனைவரும் உணர்வோம்.

இந்தக் கவனயீர்ப்பானது, பெப்ரவரி 03. 2021 இல் பொத்துவில்லில் தொடங்கி பெப்ரவரி 07.2021 இல் பொலிகண்டியில் நிறைவு பெறுகின்றது. இந்தக் கவனயீர்ப்பு நடைப்பயண அமைதி வழிப் போராட்டமானது, மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை எமக்கு நம்பிக்கையையும், உறுதியையும் தருகின்றது. இந்தப் போராட்டத்தைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒழுங்கமைத்து நடாத்துபவர்கள், உணவு, தங்குமிடம், ஊர்தி வசதி என்று பக்க பலமாக நிற்கும் எமது உறவுகள், மிக நீண்ட நடைப் பயணத்தில் பங்கு கொள்பவர்கள், பல்வேறு வகைகளிலும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பவர்கள் அனைவருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையினராகிய (NCCT) நாங்கள், கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்கள் அனைவரதும் அசைக்க முடியாத உறுதி எங்களுக்குத் தொடர்ந்து தாயகம் சார்ந்து செயற்படுவதற்கான புதிய உத்வேகத்தைத் தருகின்றது. ஈழத்தில் நீங்கள் முன்னெடுக்கும் இத்தகைய போராட்டங்கள் அனைத்துக்கும் உறு துணையாகக் கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களாகிய நாம் இணைந்து நின்று பணியாற்றுவோம் என்றும் உறுதி கூறுகின்றோம்.

இலங்கை அரசானது தாயகத்தில் தொடர்ச்சியாக, அண்மைக் காலங்களில் தனது அடக்கு முறையினை, நில அபகரிப்பு, அடையாள அழிப்பு, காணாமல் ஆக்கப் பட்டோருக்கான நீதி மறுப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்று கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக பல வழிகளிலும் துரிதப்படுத்தி வருகின்றது.

சிங்கள அரசாங்கமானது நோய்த் தொற்றுக் காலச் சூழலைக் கூடத் தனது திட்டமிட்ட தமிழினப் பண்பாட்டுப் படுகொலைக்குப் பயன்படுத்துகின்றது. இத்தகைய சதித் திட்டங்களைத் தொடர்ந்து தமிழினத்தின் மீது திணித்து வன்முறை ஆட்சியைக் காலாதி காலமாக மேற்கொண்டு வரும் அரசை நீதியின் முன் நிறுத்த, நாம் அனைவரும் ஒன்று பட்டு நிற்போம். நிலத்திலும், புலத்திலும் தமிழ்த் தேசிய இனமாக தொடர்ந்து ஒன்று பட்டு நின்று போராடுவோம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |