வெளிநாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகள் குறித்த பிரச்சினைகளை சபையில் முன்வைக்க முயற்சித்த எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டிருந்ததோடு சபை அமர்வுகளையும் சபாநாயகர் நாளை வரை ஒத்திவைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சபையில் எழுந்த எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிநாடுகளிலுள்ள ஸ்ரீலங்கா நாட்டவர்கள் பற்றிய பிரச்சினையொன்றை முன்வைக்க தொடங்கினார்.
வெளிநாட்டில் பணிபுரியும் ஸ்ரீலங்கா பிரஜைகளை இலவசமாக நாட்டிற்குள் வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.
எனினும் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி எதிர்க்கட்சி தலைவர் செயற்படுவதாக ஆளும் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் போதே சபையில் அமளி ஏற்பட்டு நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்னறில் சஜித் கருத்துத் தெரிவிக்கையில்,
நாற்பதாயிராத்திற்கும் அதிகமான ஸ்ரீலங்கா நாட்டுத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் அனாதரவாகியுள்ளனர். அவர்களை நாட்டிற்கு மீண்டும் வரவழைப்பதில் அதிகளவில் பணம் அறவிடப்படுகின்றது. விமானச் சீட்டுக்கும் தனிமைப்படுத்துவதாக கூறி ஹோட்டல்களுக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குமென அவர்களிடமிருந்தே அறவிடப்படுகின்றது.
இப்போது வரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் 14 பில்லியன் ரூபா சேமிப்பில் உள்ளது. இந்த பணத்தை செலவு செய்து எமது மக்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்துவர ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் எமது மக்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை செலவு செய்து நாட்டிற்கு வரவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட இந்த ஒழுங்குப் பிரச்சினை காரணமாக ஆளும் தரப்பிற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
குறிப்பாக வெளிநாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகளை வரவழைப்பது குறித்து பதிலளிக்காமல், மாறாக சஜித் பிரேமதாஸவினால் சுட்டிக்காட்டப்பட்ட 14 பில்லியன் ரூபா இருப்புப் பணம் குறித்தே ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் எந்தவித நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடங்காத ஒரு விடயம் குறித்து சபையில் பேசிக்கொண்டிருப்பதாகவும், சபை விதிமுறைகளை மீறி செயற்பட்டு வருகின்றார் எனவும் தெரிவித்து சஜித் பிரேமதாஸவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் எதிர்க்கட்சி தலைவரும் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
0 Comments