Home » » இலங்கை போக்குவரத்து சபை நடத்துனருக்கு கொரோனா

இலங்கை போக்குவரத்து சபை நடத்துனருக்கு கொரோனா

 


மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் கடந்த 6 ஆம் திகதி புதன்கிழமை மதியம் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை(6) மதியம் 1.30 மணியளவில் மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் மக்களிடம் எழுந்தமானமாக பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள் ,உணவகம், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்கள், முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், பயணிகள் என பல தரப்பட்டவர்களிடம் எழுந்தமானமாக பீ.சி.ஆர்.பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனையின் அறிக்கைகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியாகியது.

200 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக புத்தளம் அரச போக்குவரத்து சேவையில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவருக்கும், மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடாத்தி வரும் காத்தான் குடியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இவர்களுடன் தொடர்பு உள்ள முதல் நிலை தொடர்பாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |