Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருதில் கொரோனா தொற்றாளர் 51 ஆக அதிகரிப்பு

 


அஸ்லம் எஸ்.மௌலானா)

கடந்த இரண்டு நாட்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்திருப்பதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் இன்று (04) தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய குடும்ப உறவினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஏலவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் உறவினர்கள் பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் நேற்று முன்தினம் 14 பேருக்கும் நேற்று 03 பேருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக மருதமுனை மற்றும் பாலமுனை கொவிட்-19 நோயாளர்களுக்கான விசேட பராமரிப்பு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கும் தொடர்புடையவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகின்றது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு, கொவிட்-19 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் இதுவரை பூரண சுகம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 28 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுள் ஒருவர் மரணித்து, அவரது ஜனாஸா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் ஞாயிறு (03) வரை மொத்தமாக 867 பேருக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இருநூறுக்கு மேற்பட்டோர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் கொவிட்-19 தடுப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நடவடிக்கைகளுக்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் உட்பட பல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர் எனவும் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments