Advertisement

Responsive Advertisement

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45000ஐக் கடந்தது; பல பகுதிகளில் முடக்க நிலை- முழு விபரம் இதோ...!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 467 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 451 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 16 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 726 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 565 பேர் குணமடைந்து நேற்றைய தினம் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 210 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 583 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பசறை பிரதேசத்தில் மேலும் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பசறை ஹிங்குருகடுவ பகுதியில் முன்னதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 6 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில், 43 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, பசறை பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இவர்களில் 23 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவ சுகாதார பிரிவுக்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டம் – பீரட் பிரிவில் மேலும் இருவருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டம் -பீரட் பிரிவில் முன்னதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, குறித்த நால்வருடனும் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறித்த PCR பரிசோதனை முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில், மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாய் ஒருவருக்கும் அவரது மகளுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டம் -பீரட் பிரிவிலுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர – அலுபொத்த பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

படல்கும்புர பொதுசுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, படல்கும்புர பிரதேசத்தில் இதுவரையான காலப்பகுதியில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் PCR மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோதே குறித்த ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மூவருக்கும், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் மேலும் 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினத்தில் 97 Rapid Antigen பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய முகாம் டவுன் பகுதியைச் சேர்ந்த மூவரும், கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, நாவிதன்வெளி, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை நகர் பகுதியில் மேலும் மூவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனைகளின் மூலம் குறித்த மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மத்திய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் கடமை புரியும் பெண் ஊழியர் ஒருவர், அவரது தாயார் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, திருகோணமலை மத்திய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றும், NC வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றும், மூடப்பட்டுள்ளன.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 12 இலட்சத்து 88 ஆயிரத்து 562 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கடந்த 2 ஆம் திகதி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக சுவாசப் பையில் ஏற்பட்ட கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை ஆகியன இவரது மரணத்திற்கான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொவிட் நிமோனியா தாக்கம் மற்றும் வலிப்பு ஆகியன அவரது மரணத்திற்கான காரணமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments