Home » » மட்டக்களப்பு- வாழைச்சேனை வியாபாரிகள் மூவருக்கு கொரேனா தொற்று- கடைகளை மூட தீர்மானம்!!

மட்டக்களப்பு- வாழைச்சேனை வியாபாரிகள் மூவருக்கு கொரேனா தொற்று- கடைகளை மூட தீர்மானம்!!

 


எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அவசர உயர்மட்ட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரீ.ஸ்டீப் சஞ்ஜீவ்;;, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களான எம்.அஷ்ரப், எஸ்.சுரேஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன், மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர், வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சபை உறுப்பினர்கள், சபையின் உத்தியோகத்தர்கள், மீனவ சங்;க பிரதிநிதிகள், வர்த்தகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை சுகாதார பிரிவில் காத்தான்குடியுடன் தொடர்புபட்ட வர்த்தகர்களுக்கு எடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை மூலம் வாழைச்சேனை பிரதான சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மூன்று வர்த்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த வியாபார நிலையம் மூடப்பட்டது.

இதன்பிரகாரம் வாழைச்சேனை பிரதான சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபார உரிமையாளர்கள், தொழில் புரிபவர்களின் பாதுகாப்பு கருதி வியாபார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறும், நாளை செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகம் ஆகியவற்றுக்குட்பட்ட பிரதான வீதியிலுள்ள அனைத்து வியாபார உரிமையாளர்கள், தொழில் புரிபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் பிரகாரம் அன்டிஜன் பரிசோதனை மூலம் எவ்வாறான வியாபார நிலையங்களை மாத்திரம் திறப்பது என்று தீர்மானிக்கப்படும் என்று உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ள வெளிமாவட்ட மீனவர்களின் மீன்பிடி படகுகளை தங்கள் பகுதிக்கு கொண்டு செல்வதாயின் வருகை தரும் போது பீ.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் மற்றும் குறித்த பிரதேசத்தின் மீன்பிடித் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி கடிதத்துடன், எதிர்வரும் 16ம், 17ம், 18ம் திகதிகளில் கட்டம் கட்டமாக வருகை தந்து படகுகளை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

அத்தோடு சுகாதார விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் வரும் வெளிமாவட்ட மீன்பிடி படகு மீனவர்கள் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |