Advertisement

Responsive Advertisement

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34 வது ஆண்டு நினைவு தினம் பொலிஸாரின் தடையையும் மீறி இன்று நடைபெற்றது!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
கொக்கட்டிச்சோலையின் 34 வது ஆண்டு படுகொலை தினம் வியாழக்கிழமை (28) மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள “கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி” முற்றத்தில் பொலிசாரின் தடைகளையும் மீறி இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினளர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர், இ.பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், வடகிழக்கு வாலிபர் முன்னணித் தலைவர், கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர், லோ.தீபாகரன், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

எனினும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என மண்முனை தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தி.புஸ்பலிங்கத்திற்கு பொலிசார் தடைவிதித்ததன் காரணமாக தவிசாளர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இதன்போது நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.

1987ஆம் ஆண்டு, முதலைக்குடா இறால் வளர்ப்புப் பண்ணையில் வேலைசெய்த முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 1987 ஜனவரி 28ஆம் திகதி இடம்பெற்ற இறால் வளர்ப்பு பண்ணை படுகொலையும் 1992 ஜுன்12ஆம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 239பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த படுகொலையின் போது உயிரிழந்த தமிழர்களை நினைவு கூரும் வண்ணமே ‘கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000ஆம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments