கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அங்கு கொரோனா நோய்த் தாக்கத்திற்குள்ளானோரின் எண்ணிக்கை 268ஆக அதிகரித்துள்ள அதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன், நேற்று (14) தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைந்து காணப்பட்டு வந்த நிலையில், நேற்று (13) பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின்போது, ஒரே நாளில் புதிதாக மேற்படி 19 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தினுள் அமைந்துள்ள கல்முனை கடற்கரைப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிசெம்பர் மாதம் நடுப்பகுதியில் கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியதையடுத்து, கடந்த 23ஆம் திகதி தொடக்கம் கல்முனை நகரை மையப்படுத்தி, செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, நேற்று (14) முற்பகல் 10 மணி வரையான காலப்பகுதியில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேரும் கல்முனை தெற்கில் 268 பேருமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 362 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 1,013 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குட்பட்டிருப்பதுடன், அவர்களில் 684 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 329 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இப்பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.
0 comments: