PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த 15 உறுப்பினர்களுக்கும் கடந்த புதன்கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்றும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கர மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர, பிரதமரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே, ஆளும் கட்சியின் பிரதம கொறடா செயலாளர் சமிந்த குலரத்ன ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் 463 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 comments: