Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சனி- வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு இன்று !

 


நமது சூரிய மண்டலத்தில் சனி- வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு இன்று நிகழவுள்ளது. 


நம்முடைய பார்வைப் புலம் (Line of sight) இருக்கும் திசையில், இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவு (Great Conjunction) இன்று நடைபெறும். சாதாரணமாக இந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான ஒருங்கமைவு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றாலும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இரு கோள்களும் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன. 

அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு (Angular Distance) புள்ளி ஒரு டிகிரியாக (0.1 Degree) இருந்துள்ளது. இதே அளவு தொலைவிலான பார்வைக் கோண நெருக்கம், இன்று அமையவுள்ளது. 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒருங்கமைவில் இரு கோள்களுக்கு இடையில் தோன்றும் கோணத் தொலைவை ஒப்பிடும்போது தற்போது தோன்றும் ஒருங்கமைவில், இடைவெளி வெறும் பத்தில் ஒரு மடங்கிற்கும் குறைவுதான்.

இதேபோன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்ததாக 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு படிப்படியாக குறைந்து டிசம்பர் 21 ஆம் திகதி (இன்று) மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை புள்ளி ஒரு டிகிரியாக மாறும். அன்று இந்த கோள்கள் ஒரே புள்ளியில் சேர்ந்து காட்சியளிக்கும். உண்மையில் அந்த இரண்டு கோள்களும் அருகில் இருக்காது. அவற்றின் தூரம் மிக அதிக அளவில் இருந்தாலும் அவை நேர்கோட்டில் இணைவதால் அவ்வாறு தோன்றும்.

வியாழன் கோளானது பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், சனி கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.  எனவே இவற்றிற்கு இடைப்பட்ட உண்மையான தொலைவு 74 கோடி கிலோ மீட்டரைவிட அதிகம். இவ்வளவு தொலைவில் இவை இருப்பதால், இந்த நிகழ்வு நடைபெறும் சமயத்தில் இந்த கோள்கள் நம் பூமி மீது ஏற்படுத்தும் தாக்கம் மிக மிக குறைவாகவே இருக்கும்.

Post a Comment

0 Comments