Home » » எனது குரல் ஓங்கி ஒலிக்கும் - ஒருபோதும் தளர்வடையேன்! சாணக்கியன் சபதம்

எனது குரல் ஓங்கி ஒலிக்கும் - ஒருபோதும் தளர்வடையேன்! சாணக்கியன் சபதம்



சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடித்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முன்னின்று நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரில் 71 இற்கும் அதிகமானவர்கள் இறந்து போய் உள்ளதனை ஆவணப்படுத்தி, அதனை கையளிக்கும் வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற கையேட்டு நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் பங்கு பெற முடியாமையினை நினைத்து மிகவும் மனம் வருந்துகின்றேன்.

இருப்பினும் இனி வருகின்ற காலங்களில் ஒரு இளைஞன் என்ற வகையில் பல வருடங்கள் கடந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் நான் தளர்வடைய மாட்டேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.

இப்போராட்டத்தினை நீதி கிடைக்கும் வரையில் எக்காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன் என உறுதியாக கூறுகின்றேன்.

நாட்டில் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் தலைதூக்கியுள்ள நிலையில், எமக்குரிய நீதி கிடைப்பதென்பது சந்தேகமே.

ஆகையினால் எமது போராட்டங்களை சர்வதேச பார்வைக்கு கொண்டுவருவது எமது தலையாய கடமையாகும். எமது பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் அனைவரும் முன்னிற்க வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும்.

தமிழர்களுக்கான நீதியினை பெற்றுக்கொடுக்க இளைஞன் என்ற வகையில் நான் நிச்சயம் முன்நிற்பேன். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு, எவ்வாறு இருக்கின்றார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. இதற்கு தற்போதைய அரசு பதிலளிக்க வேண்டும்.

காலங்கள் பல சென்றாலும் மக்களுக்கான எனது பணிகள் தடைகள் பலவற்றையும் தாண்டி மேற்கொள்ளப்படும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான எனது குரல் என்றும் ஒலிக்கும் என்பதை மீண்டுமொருமுறை உங்களிடத்தில் கூறிக் கொள்வதுடன், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமையினை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |