மட்டக்களப்பு- காத்தான்குடியில் இன்று(26.12.2020) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் கொவிட் பரிசோதனையின் போது ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் காத்தான்குடியைச் சேர்ந்த ஆறுபேருக்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமையும் நேற்று முன் தினம் வியாழக்கிழமையும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், காத்தான்குடியிலுள்ள ஒரு தனியார் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் என 15 பேருக்கு இன்றைய தினம் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காத்தான்குடியிலுள்ள ஒரு தனியார் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றுபவர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களுக்குமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பிராந்திய தொற்று நோயியல் பொறுப்பதிகாரி டாக்டர் குணசேகரம் அவர்களின் மேற்பார்வையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசனின் தலைமையில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், மற்றும் செனவிரட்ன ஆகியோர் இந்த அண்டிஜன் பரிசோதனையை மேற் கொண்டனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன் மற்றுமொரு குடும்பத்தில் கணவன், மனைவி என தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஒரு சிறிய கொத்தனியாக இருக்கலாமெனவும் சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசனின் ஆலோசனையில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார அதிகாரி ஏ.எல்.எம்.பசீரின் தலைமையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குடும்ப உறவினர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளையில் ஆரையம்பதியில் இனங்காணப்பட்டவர்கள் கல்முனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடமையாற்றுவதாகவும் அவரது மனைவி நாவற்குடாவில் உள்ள அதே நிறுவனத்தில் கடமையாற்றுவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
அவருடன் தொடர்புபட்டவர்களையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
0 comments: